Mar 24, 2017

விடைத்தாள் திருத்தத்தில் விதிமீறல் : அண்ணா பல்கலையில் குளறுபடி.

அண்ணா பல்கலையில், தகுதியில்லாத பேராசிரியர்களை, விடைத்தாள் திருத்த அனுமதிப்பதால், மாணவர்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
அண்ணா பல்கலை இணைப்பில், 550 இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகள் உள்ளன. அவற்றில், ஆண்டுதோறும், மூன்று லட்சம் பேர் பட்டம் பெறுகின்றனர். அவற்றில், அண்ணா பல்கலை சென்னை வளாகத்திலுள்ள மூன்று துறை கல்லுாரிகள்; குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லுாரிகளில் மட்டும், விடைத்தாள் திருத்தத்துக்கு, துறை தலைவர்களே பொறுப்பாளர்களாக உள்ளனர். மற்ற கல்லுாரிகளின் விடைத்தாள்கள், அண்ணா பல்கலையின் தேர்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மண்டல அதிகாரிகளின் அனுமதி பெற்ற குழுவினரால் திருத்தப்படுகின்றன. 

அரசு, தனியார் இன்ஜி., - ஆர்க்கிடெக்ட் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்த, மண்டல அலுவலர்கள் மூலம், தேர்வுத்துறை அனுமதி அளிக்கிறது. அவர்களுக்கு, ஒரு பாடத்துக்கு, 300 ரூபாய் முதல், 700 ரூபாய் வரை, திருத்தும் கட்டணம் தருகிறது. மண்டல அலுவலக அதிகாரிகளின் செல்வாக்கு காரணமாக, தகுதி இல்லாதவர்கள், விடைத்தாள் திருத்துவதால், குளறுபடிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

 இது குறித்து, பேராசிரியர் வட்டாரங்களில் கிடைத்த தகவல்கள்: விடைத்தாள் திருத்தும் பணி வழங்க, பேராசிரியர்களுக்கு, சில கட்டுப்பாடுகள் உள்ளன. எம்.இ., மற்றும் பிஎச்.டி., முடித்த உதவி, இணை பேராசிரியர்களாகவும், துறை தலைவர்களாகவும் இருக்க வேண்டும்.திருத்தும் பாடத்தை அறிந்த, அதை இணை பாடமாக படித்த ஆசிரியர்களாக இருக்க வேண்டும். பிஎச்.டி., முடித்த பின், இரண்டு ஆண்டுகளுக்கு மேல், பேராசிரியராக பணி அனுபவம் இருக்க வேண்டும். ஆனால், அண்ணா பல்கலை தேர்வுத்துறைக்கு விண்ணப்பிக்கும் பேராசிரியர்கள், பிஎச்.டி., படித்த காலத்தையும் அனுபவத்தில் சேர்த்து கொள்கின்றனர். அவர்கள், பேராசிரியராக பணியாற்றியதாக, போலியாக, சில தனியார் கல்லுாரிகளில் சான்றிதழ் பெற்று, தேர்வுத் துறையிடம் அனுமதி பெறுவது, அதிகரித்து வருகிறது.தகுதி இல்லாதவர்கள் விடைத்தாள் திருத்துவதால், பல குளறுபடிகள் ஏற்படுகின்றன. 

தேர்வை நன்கு எழுதியவர்கள், மதிப்பெண் குறைவாகவும், மோசமாக எழுதியவர்கள், முறைகேடாக தேர்ச்சி பெறுவதும் நடக்கிறது.அதனால், தேர்வுத் துறைக்கு வரும் மறுமதிப்பீடு மற்றும் மதிப்பீட்டை ஆட்சேபிக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு, அண்ணா பல்கலை முற்றுப்புள்ளி வைத்து, தகுதியானவர்கள் மூலம், தேர்வுத்தாளை திருத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு பேராசிரியர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment