மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் சலுகைகள், வசதிகளுடன்
இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில், புதிய மசோதா, பார்லி.,யில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
தற்போது,
உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது
கேளாதோர் என மூன்று பிரிவினருக்கு,
தலா, 1 சதவீதம் என, மாற்றுத்
திறனாளிகளுக்கு, மொத்தம், 3 சதவீத இட ஒதுக்கீடு
அளிக்கப்படுகிறது. இதில், மனநோய் குறைபாடுகள்
மற்றும் பல்வேறு குறைபாடுகள் உள்ளவர்கள்
என மேலும் இரண்டு பிரிவுகளையும்
சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாற்றுத்
திறனாளிகள் சட்டம், 1995, தற்போது நடைமுறையில் உள்ளது.
இதில் பல்வேறு மாற்றங்கள் செய்து,
குறைபாடு உள்ள மக்களின் உரிமைகள்
மசோதா, கொண்டு வரப்பட உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் தற்போது, ஏழு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 'ஆட்டிசம்' மற்றும் கடும் நரம்பியல்
பாதிப்புகள் உட்பட பல்வேறு பிரிவுகள்
சேர்க்கப்பட்டு, மொத்தம், 19 வகைகளாக பிரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கான அமைச்சகம், இந்த மசோதாவை தயாரித்து,
பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.
லட்சக்கணக்கான
மாற்றுத்திறனாளிகளுக்கு பலனளிக்கும் வகையில், மாநில அரசுகளால் அளிக்கப்படும்
மாற்றுத்திறனாளி சான்றிதழ், நாடு முழுவதும் செல்லுபடியாகும்
பிரிவும், புதிய மசோதாவில் சேர்க்கப்படுகிறது.
மேலும், பொது கட்டடங்கள், மருத்துவமனைகள்,
பொது போக்குவரத்து, ஓட்டுச் சாவடிகள் ஆகியவற்றில்
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்படுவதை,
அவர்களுடைய உரிமையாகவும் அறிவிக்கப்பட உள்ளது.