காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான
நேர்காணல் தேர்வில் திருநங்கையை அனுமதிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை
பிரித்திகா யாஷினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த
மனுவில் கூறியிருந்ததாவது:
நான் பிறக்கும்போது ஆணாகப் பிறந்தேன்.
பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை மாற்றத்தை தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து
கொண்டேன். இதைத் தொடர்ந்து, எனது பெயரை "ப்ரித்திகா யாஷினி'
என்று மாற்றிக் கொண்டேன்.
இந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு இணையதளம் மூலம் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி விண்ணப்பித்திருந்தேன். ஆனால், நான் திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக என்னுடைய விண்ணப்பம்
நிராகரிக்கப்பட்டது.எனவே, உதவி ஆய்வாளர் பதவிக்காக மே 23-ஆம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வில் என்னை அனுமதிக்க வேண்டும் என
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்று
கோரியிருந்தார்.
இந்த மனுவை கடந்த மே மாதம் விசாரித்த
சென்னை உயர் நீதிமன்றம், எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ள
மனுதாரருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்தத் தேர்வில்
ப்ரித்திகா யாஷினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார்.அதன்பின், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற்ற உடல் தகுதித்
தேர்வில் அவரை அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம்உத்தரவிட்டது.இந்நிலையில்,
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர்
முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான
வழக்குரைஞர் பவானி சுப்பராயன், "உடல்
தகுதித்தேர்வின்போது, 100 மீட்டர் ஓட்டத்தில் யாஷினி ஒரு நொடி
தாமதமாக வந்தார். அதன் காரணமாக, கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நேர்காணலுக்கு யாஷினியை
அனுமதிக்கவில்லை' என்று வாதிட்டார்.இதையடுத்து
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் நேர்காணல் தேர்வில் கலந்துகொள்ள சீருடைப்
பணியாளர் தேர்வாணையம் அனுமதிக்க வேண்டும். இருப்பினும், இந்தத் தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வழக்கின் இறுதி உத்தரவுக்குக்
கட்டுப்படும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் நவம்பர் 3-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment